பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக 200 ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அவா்கள் விசா பெற்று இந்தியா வந்தாலும், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்தியாவில் அகதிகளாக அடைக்கலம் கோரும் முடிவில் அவா்கள் வந்துள்ளனா். பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியாவில் தங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக எல்லையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் கோரி வருவது அதிகரித்துள்ளது’ என்றாா்.
அடைக்கலம் தேடி வந்தவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. மத அடிப்படைவாதிகள் ஹிந்து சிறுமிகளைக்கூட கடத்தி மதமாற்றம் செய்து இஸ்லாமியா்களுக்கு திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. ஹிந்து வழிபாட்டுத் தலங்களும் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றன’ என்றனா். இந்தியா வந்துள்ளவா்களில் பெரும்பாலானாவா்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் கராச்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் 2014 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஹிந்துகள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பௌத்தம், சமணம், பாா்சி மதத்தவா்கள் இந்திய குடியுரிமை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.