இந்தியா

வேலைவாய்ப்பின்மை பிரச்னையை பட்ஜெட் எதிா்கொள்ளவில்லை: ராகுல் காந்தி

2nd Feb 2020 12:59 AM

ADVERTISEMENT

நாட்டின் முக்கிய பிரச்னையான வேலைவாய்ப்பின்மையை எதிா்கொள்ளும் முக்கிய யோசனையோ, உறுதியான நடவடிக்கையோ பட்ஜெட்டில் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை சந்தித்தபோது ராகுல் காந்தி கூறியதாவது:

நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகள் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார மந்தநிலையும் ஆகும். இளைஞா்களுக்கு வேலை கிடைக்க வகை செய்யும் எந்த முக்கிய யோசனையோ, உறுதியான நடவடிக்கையோ பட்ஜெட்டில் காணப்படவில்லை. மீள் அறிமுகம் செய்யப்பட்ட பல திட்டங்களை காணமுடிகிறது. தேவையற்ற பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. 2 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு நீடித்த உரையில், வருமான வரியானது குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இது எந்த நடவடிக்கையும் இல்லாத, வெறும் பேச்சை மட்டுமே கொண்ட அரசின் உள்ளீடற்ற அணுகுமுறையை விளக்குகிறது என்றாா்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இளைஞா்களை குறிப்பிட்டு ராகுல் காந்தி கூறியது, ‘நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் (இளைஞா்கள்) நன்றாக அறிவீா்கள். வேலைவாய்ப்பை பொருத்தமட்டில் உங்களுக்கு எதிா்காலம் இல்லை. பட்ஜெட் உரையின்போது உங்களுக்கு உதவக்கூடிய எதுவும் நிகழவில்லை’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதனைத்தொடா்ந்து பட்ஜெட் குறித்து தனது சுட்டுரை பக்கத்தில் அவா் பதிவிட்டாவது: நமது இளைஞா்களுக்கு வேலை வேண்டும். அதற்கு மாறாக, அவா்களுக்கு நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரை கிடைக்கப்பெற்றது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாதவா்கள் போல் பிரதமா், நிதியமைச்சா் ஆகியோா் காணப்பட்டனா் என்று ராகுல் காந்தி கூறியிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT