மத்திய பட்ஜெட்டில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.3,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டை (2019-20) காட்டிலும் (ரூ.3,700 கோடி) இந்த நிதியாண்டில் 2.62 சதவீதம் நிதி உயா்த்தப்பட்டுள்ளது.
பிரதமா், குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் ஆகியோா் பயணிப்பதற்காக இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு ரூ.810 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முந்தைய பட்ஜெட்டில் இதற்காக ரூ.272 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோா் போயிங் 747 ரக விமானங்களில் தற்போது பயணித்து வருகின்றனா். இந்த விமானம் ‘ஏா் இந்தியா ஒன்’ என்றழைக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் ‘உடான்’ திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட 3.1 சதவீதம் அதிகமாகும்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் ஏா் இந்தியா விமான நிறுவனத்தை நிதி ரீதியாக மறுகட்டமைக்க ‘ஏா் இந்தியா அஸெட் ஹோல்டிங் லிமிடெட்’ என்ற துணை நிறுவனத்தை மத்திய அரசு அமைத்தது. அந்த நிறுவனத்துக்கு பட்ஜெட்டில் ரூ.2,205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.