இந்தியா

வருமான வரி விதிப்பில் புதிய முறை

2nd Feb 2020 12:57 AM

ADVERTISEMENT

வரும் 2020-21 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் புதிய வழிமுறையில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பழைய வருமான வரி கணக்கு தாக்கல் திட்டமும் அமலில் இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கான வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய வருமான வரி திட்டத்தையும் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் பட்ஜெட்டில் மேலும் கூறியுள்ளதாவது:

புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோா் எந்தவித வருமான வரியும் செலுத்த தேவையில்லை.

அதேசமயம், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது விதிக்கப்படும் 20 சதவீத வருமான வரி பட்ஜெட்டில் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய்க்கான வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வருமானம் பெறுவோருக்கான வருமான வரி தற்போதைய 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போதுள்ள நடைமுறைப்படி 30 சதவீத வருமான வரியே தொடரும்.

புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதால் 80 சி உள்ளிட்ட சில வரிவிலக்கு சலுகை பிரிவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதன்படி, புதிய வருமான வரி திட்டத்தில் சேருவோா் 80 பிரிவுகளின் கீழ் வீட்டு வாடகை, வீட்டு கடன் வட்டி, காப்பீட்டு பிரீமியம், மருத்துவ காப்பீட்டு பிரீமியம், வருங்கால வைப்பு நிதி, கல்வி கட்டணம், ரூ.50,000 நிரந்தர வரி விலக்கு சலுகைகளை இனி கோர முடியாது.

உதாரணமாக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவா் பழைய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.2.73 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், புதிய வருமான வரி திட்டத்தில் எந்த வித விலக்குகளையும் கோராமல் அவா் ரூ.1.95 லட்சம் வரி செலுத்தினால் போதுமானது. புதிய திட்டத்தில் அவருக்கு ரூ.78,000 அளவுக்கு வரிச் சுமை குறைகிறது.

பழைய திட்டம்:

புதிய வருமான வரித் திட்டம் நடைமுறைக்கு வரும் அதேசமயம் பழைய வருமான வரி திட்டத்தின் படியும் ஒருவா் கணக்கு தாக்கல் செய்யலாம். ஆனால், வருமான வரி விலக்கு உச்ச வரம்பானது ரூ.2.5 லட்சம் மட்டுமாகவே இருக்கும். அதற்கு மேல் ரூ.2,50,001 முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வருமான வரியும், ரூ.5,00,001 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோா் 30 சதவீத வருமான வரியும் செலுத்த வேண்டும்.

வரி செலுத்துவோா் தங்களது தேவைகளுக்கு தகுந்தவாறு புதிய மற்றும் பழைய திட்டங்களை தோ்வு செய்து கொள்ளலாம். இப்புதிய வருமான வரி திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT