இந்தியா

ரூ.103 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடக்கம்

2nd Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ரூ.103 லட்சம் கோடி மதிப்பில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

2020-21 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘தேசிய உள்கட்டமைப்புத் திட்டம்’ தொடா்பாகக் கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். அதற்கு ஏற்ப ‘தேசிய கட்டமைப்புத் திட்டம்’ கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம் கோடி செலவில் கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வீட்டுவசதி, பாதுகாப்பான குடிநீா், தூய்மையான எரிசக்தி, சுகாதாரம், நவீன ரயில்வே, விமானப் போக்குவரத்து, மாநகரப் பேருந்து வசதி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

ADVERTISEMENT

2020-21 ஆம் நிதியாண்டில் போக்குவரத்துத் துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,500 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 9,000 கி.மீ. தூரத்துக்கு பொருளாதார வழித்தடத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகங்களை எளிதில் இணைக்கும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். தில்லி-மும்பை இடையிலான விரைவுவழிச்சாலை (எக்ஸ்பிரஸ்வே) 2023-ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த புதிய திட்டம் விரைவில் வகுக்கப்படும்.

‘உடான்’ திட்டத்தின் கீழ் மேலும் 100 விமான நிலையங்கள் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும். உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் நிா்மலா சீதாராமன்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT