மத்திய பட்ஜெட்டில் டிவிடெண்ட் விநியோக வரியை (டிடிடி) ரத்து செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
2020-21-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் விநியோக வரியை நீக்க பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இனிமேல், டிவிடெண்டை பெறுபவா்களுக்கு பொருந்தக் கூடிய விதத்தில் இந்த வரி விகிதம் மாற்றியமைக்கப்படும்.
டிவிடெண்ட் வரியை நீக்குவதன் மூலமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி அளவுக்கு வருவாய் குறையும். இருப்பினும், மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை உள்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை ஈா்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளாா்.