இந்தியா

சிஏஏ எதிர்பாளர்களின் மூதாதையர்கள்தான் நாட்டைப் பிரித்தார்கள்: யோகி கடும் சாடல்

2nd Feb 2020 03:27 AM |  நமது நிருபர்  

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களின் மூதாதையர்கள்தான் 1947-ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தார்கள் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் யோகி ஆதித்யநாத் தில்லியில் சனிக்கிழமை தனது பிரசாரத்தைத் தொடக்கினார். காரவல் நகர், ஆதர்ஷ் நகர், நரேலா, ரோகிணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
 தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கம் வெறுமன அச்சட்டத்தை எதிர்ப்பது மட்டுமல்ல.
 உலக வல்லரசாக இந்தியா மாறுவதை விரும்பாதவர்களே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 இந்தப் போராட்டங்களை நடத்துபவர்களின் மூதாதையர்கள்தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தார்கள். அவர்களின் வழிவந்தவர்கள், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
 காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்கள்தான் ஷகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள், நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், "விடுதலை' எனக் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
 ஷகீன் பாக்கில் போராட்டம் நடத்துபவர்களுக்கு கேஜரிவால் அரசு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. இந்த தேச விரோதப் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
 முன்பு, பாகிஸ்தானிடம் பணம் பெற்றுக் கொண்டு காஷ்மீரில் சிலர் பொது சொத்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவார்கள். காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இது போன்ற கல் வீசித் தாக்குபவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டன.
 ஆனால், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதில் இருந்து இந்த கல்வீச்சுச் சம்பவங்கள் நின்று விட்டன.
 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் நரகத்துக்கு அனுப்பினார்கள். கேஜரிவாலுக்கு மெட்ரோ, தூய்மையான குடிநீர், சாலைகள் தேவையில்லை. அவருக்கு ஷகீன் பாக்தான் தேவை என்றார் யோகி ஆதித்யநாத்.
 ஜாமியா நகரில் இன்று பிரசாரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துபோராட்டம் நடைபெற்று வரும் ஷகீன் பாக், போராட்டத்தில் வன்முறை வெடித்த ஜாமியா நகர் ஆகிய இடங்கள் அடங்கிய ஓக்லா தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை யோகி ஆதித்யநாத் பேசவுள்ளார்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT