இந்தியா

தில்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

1st Feb 2020 08:23 PM

ADVERTISEMENT


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தில்லியில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது.

தில்லி ஷஹீன் பாக் பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் இன்று திடீரென்று ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் தென்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து காவலர் ஒருவர் தெரிவிக்கையில், "மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் துல்லுப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்றார்.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்த நபர் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக, தில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த வியாழக்கிழமை இளைஞர் இதேபோல் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பல்கலைக்கழக மாணவர் ஷதாப் ஃபரூக் காயமடைந்தார். 

இதற்கு முன் தில்லி தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது, ​​பாஜக தலைவரும், மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூர், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டித்துப் பேசினார். அப்போது, கூட்டத்தினரைப் பார்த்து, ‘துரோகிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : CAA
ADVERTISEMENT
ADVERTISEMENT