இந்தியா

விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: குடியரசுத் தலைவர்

1st Feb 2020 12:23 AM

ADVERTISEMENT

"விவாதங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
 மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
 குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதன் மூலம் "தேசத்தந்தை' மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது. போராட்டம் என்ற பெயரில் நிகழும் வன்முறைகள் தேசத்தையும், சமூகத்தையும் வலுவிழக்கச் செய்யும். விவாதமும், கலந்துரையாடலுமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதியிலுள்ள மக்களுக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
 இந்த தசாப்தத்தையும், நூற்றாண்டையும் இந்தியாவுக்கு உரியதாக மாற்ற எனது அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்க எனது அரசு உறுதி கொண்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
 "முப்படைத் தளபதி' பதவி உருவாக்கப்பட்டுள்ளது, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க 1,000 விரைவு நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்படும்.
 உள்நாட்டுப் பொருள்கள்: நாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கி மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோர் பயன்பெறுவர். இது தொடர்பாக மக்களின் பிரதிநிதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
 நாட்டின் பொருளாதார மதிப்பை சுமார் ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்த அரசு உறுதிபூண்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரத்துக்கான அடிப்படை வலுவாகவே உள்ளது. அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 செல்லிடப்பேசி உற்பத்தியில் இரண்டாமிடம்: உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சி, ஏற்றுமதி ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்க "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. செல்லிடப்பேசி உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
 கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து, சிறு நகரங்களில் புதிய தொழில்முனைவோரின் எண்ணிக்கை 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. "உடான்' திட்டத்தின் கீழ் சுமார் 35 லட்சம் பேர் விமானங்களில் பயணித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தயாரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 17 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் பம்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 விவசாயிகளுக்கு நிதியுதவி: வடகிழக்கு மாநிலங்கள் மீது முந்தைய அரசுகள் உணர்வுப்பூர்வமான உறவைக் கொண்டிருக்காததால், அங்குள்ள மக்கள் நம்பிக்கையிழந்து காணப்பட்டனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிலைமையை எனது அரசு மாற்றி வருகிறது. போடோ பழங்குடியின அமைப்புகளுடன் மத்திய மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் மேற்கொண்ட ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
 ஊரகப் பகுதிகளை மேம்படுத்த எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
 இதற்காக ரூ.25 லட்சம் கோடியை அரசு செலவிட உள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
 "பாராட்டத்தக்கது': அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாட்டு மக்கள் அமைதியைக் கடைப்பிடித்தது பாராட்டத்தக்கது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தான் அரசு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராம்நாத் கோவிந்த்.
 ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த உரை
 கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு முறைப்படி அழைத்துச் சென்றனர்.
 இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் சுமார் 70 நிமிடங்களுக்கு ஹிந்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியபோது, பாஜக எம்.பி.க்கள் மேஜைகளைத் தட்டி கரவொலி எழுப்பினர். அதே வேளையில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

Tags : Budget2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT