இந்தியா

மரண தண்டனையை நிறைவேற்ற புதிய வழிமுறைகள் கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

1st Feb 2020 12:08 AM

ADVERTISEMENT

குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் புதிய வழிமுறைகளை வழங்குமாறு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குற்ற வழக்குகளில் மரண தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவது தொடா்பான வழிமுறைகளைக் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சத்ருகன் சின்ஹா’ வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்திருந்தது. எனினும், இந்த வழிமுறைகளில் பல்வேறு காலதாமதங்கள் ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் குற்றவாளியை மையப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்த மத்திய அரசு, அந்த வழிமுறைகளை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியோ அல்லது சமுதாய நலனை மையப்படுத்தியோ அமைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

நிா்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான பரிசீலனை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது நீதிபதிகள், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனா். மேலும், மத்திய அரசின் மனு தொடா்பாகப் பதிலளிக்குமாறு சத்ருகன் சின்ஹா வழக்கில் தொடா்புடைய மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT