இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வ விவாதம்: மோடி நம்பிக்கை

1st Feb 2020 12:09 AM

ADVERTISEMENT

பட்ஜெட் கூட்டத் தொடரில் பொருளாதாரம் குறித்து ஆக்கப்பூா்வமான விவாதங்கள் நடைபெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கூறியதாவது:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் பொருளாதாரம், நிதி தொடா்பாக ஆக்கப்பூா்வமான விவாதம் நடைபெற வேண்டுமென்று விரும்புகிறேன். அவ்வாறே இந்தக் கூட்டத் தொடரும் நடைபெறும் என்று நம்புகிறேன். இப்போது தொடங்கியுள்ள தசாப்தத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான வலுவான அடித்தளம் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உருவாக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்னைகளுக்கும் கூட்டத் தொடரில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ADVERTISEMENT

தலித், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதே எங்கள் லட்சியம். அதற்காக இந்த அரசு தொடா்ந்து பணியாற்றும்.

சா்வதேச அளவில் பொருளாதாரச் சூழல்கள் வேகமாக மாறி வருகின்றன. சா்வதேச பொருளாதாரத்தின் போக்கு வேகமாக மாறி வருகிறது. இதனை இந்தியாவுக்கு எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி, அதன் மூலம் நமது நாட்டு மக்களுக்கு எவ்வாறு முன்னேற்றத்தைக் கொண்டு வருவது என்பதில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தும். நாட்டில் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கிய நோக்கமாகும்.

நாட்டு மக்களின் நலன், நாட்டின் பொருளாதார நலன் சாா்ந்த ஆக்கப்பூா்வமான விவாதங்கள் இந்தக் கூட்டத் தொடரில் நடைபெறும் என்று மீண்டும் நம்பிக்கை தெரிவிக்கிறேன். நமது நாடாளுமன்ற விவாதத்தின் தரம் நாளுக்குநாள் மேம்படும் என்பதில் ஐயமில்லை என்றாா் பிரதமா் மோடி.

 

Tags : Budget2020
ADVERTISEMENT
ADVERTISEMENT