இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனை மீண்டும் நிறுத்திவைப்பு

1st Feb 2020 01:04 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

நிர்பயா பாலியல் கூட்டு வன்கொடுமை, கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு திகார் சிறையில் (பிப்.1) நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.
 இதற்கான உத்தரவை தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திர ரானா வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். மேலும், "மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரும் வரை அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைப்பதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.

 இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பவன்குமார் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

 முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனவரி 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு ஜனவரி 17-ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.

 தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திர ரானா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது குற்றவாளிகள் பவன்குமார் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சிங், அவர்களின் தூக்குத் தண்டனையை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்றும், அவர்கள் சட்ட ரீதியாகப் போராடுவதற்கான வாய்ப்புகள் இன்னும் காலாவதியாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 இதனிடையே, திகார் சிறை அதிகாரிகள் தரப்பில், "குற்றவாளிகள் ஒவ்வொருவராக நீதிமன்றத்தை அணுகி வருவதால், அவர்களை தனித் தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும்' என கோரப்பட்டது. எனினும், அவர்களின் வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சிங், "ஒரே வழக்கில் தண்டனை பெற்ற நால்வரில் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அது நிலுவையில் இருக்கும் நிலையில், மற்றவர்களை தூக்கிலிட முடியாது' என்று குறிப்பிட்டார்.

 அப்போது நீதிபதி, "குற்றவாளிகள் நால்வரில் ஒருவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாலும், மற்ற மூவருக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. அந்த ஒருவரின் மனு பைசல் செய்யப்படும் வரை தண்டனையை நிறுத்திவைக்கத்தான் வேண்டும்' என்று நீதிபதி குறிப்பிட்டார்.
 மேலும், மரண தண்டனை பெற்ற குற்றவாளியாக இருந்தாலும், சட்ட நடைமுறைப்படி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தால், அதைப் பரிசீலிப்பதுதான் நீதிமன்றத்தின் வேலையாகும். இதில் யாருக்கும் பாரபட்சமாகச் செயல்பட முடியாது. எனவே, நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை பிப்ரவரி 1-ஆம் தேதி நிறைவேற்றக் கோரி பிறப்பிக்கப்பட்ட ஜனவரி 17-ஆம் தேதி உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது' என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 உச்சநீதிமன்றத்தில்... முன்னதாக, "சம்பவம் நடைபெற்றபோது தான் சிறார் என்பதால், சிறார் பிரிவின் கீழ் விசாரித்து தண்டனையைக் குறைக்க வேண்டு' என குற்றவாளி பவன்குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 தூக்கிலிடப்படும் வரை

 போராடுவேன்: நிர்பயா தாயார்
 நால்வரின் தூக்குத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது குறித்து நிர்பயா மாணவியின் தாயார் ஆஷா தேவி கருத்துத் தெரிவிக்கையில், "எனது நம்பிக்கை தளர்ந்து விட்டது, ஆனாலும், நால்வரும் தூக்கிலிடப்படும் வரை தொடர்ந்து போராடுவேன்' என்றார்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT