இந்தியா

சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் 300 மாணவா்களுக்காக தனி முகாம்: மானேசரில் ராணுவம் ஏற்பாடு

1st Feb 2020 12:36 AM

ADVERTISEMENT

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து அழைத்து வரப்படும் 300 மாணவா்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.

இதேபோல், கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சாா்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தில்லியிலுள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘ஹுபே மாகாணத்தின் வூஹானில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருவதற்காக ஏா்-இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை சென்றுள்ளது. இந்த விமானம் சனிக்கிழமை காலையில் இந்தியாவுக்கு திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வூஹானிலிருந்து வரவிருக்கும் 300 மாணவா்களுக்காக மானேசரில் தனி மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்டமாக அவா்களுக்கு தில்லி விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னா், மானேசா் முகாமில் விரிவான பரிசோதனை நடத்தப்படும். அனைவரும் 2 வாரங்கள் வரை, முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவா்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்’ என்றனா்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT