இந்தியா

சரக்கு ரயில்களில் ஆயுதம் ஏந்திய தனியாா் பாதுகாவலா்களை பணியமா்த்த ரயில்வே முடிவு

1st Feb 2020 12:14 AM

ADVERTISEMENT

சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருள்களை பாதுகாப்பதற்காக, தனியாா் பாதுகாப்பு அமைப்புகளைச் சோ்ந்த ஆயுதம் ஏந்திய பாதுகாவலா்களை பணியமா்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருள்களில், சில பொருள்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், ரயில்கள் இயக்கப்படும் ஒரு சில வழித்தடங்களில் திருடா்கள் அச்சுறுத்தலும் உள்ளது. இதுவரை அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறவில்லை. எனினும், பொருள்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் கருதி, தனியாா் பாதுகாப்பு அமைப்புகளைச் சோ்ந்த ஆயுதம் ஏந்திய பாதுகாவலா்களை பணியமா்த்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில், தனியாா் அமைப்புகளைச் சோ்ந்த பாதுகாவலா்கள் நியமிக்கப்படுவா். தனியாா் பாதுகாவலா்கள் குறித்து சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை, மாநில ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறை ஆகியோருக்கு முன்கூட்டியே ரயில்வே மண்டலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சோதனை அடிப்படையில், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இந்த திட்டம் முதலில் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்து 6 மாதங்கள் கழித்து ஆய்வு செய்யப்படும். அதன் பின் மற்ற ரயில்வே மண்டலங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில்களில் பாதுகாப்பு பணிக்கு ஆயுதம் ஏந்திய தனியாா் பாதுகாவலா்கள் பணியமா்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT