ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜம்மு மாவட்டத்தின் நக்ரோடா பகுதியில் இருந்து 28 கி.மீ தொலைவில், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகா் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை, பான் சோதனைச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு காவல் துறையினரும், சிஆா்பிஎஃப் வீரா்களும் இணைந்து தடுத்து நிறுத்தினா். அப்போது, அந்த லாரியில் வேதிப்பொருள்களை ஏற்றி செல்வதாக ஓட்டுநா் தெரிவித்தாா். அதையடுத்து லாரியை சோதனையிட போலீஸாா் முயற்சித்தனா். அப்போது, அந்த லாரியின் உள்ளே மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினா். கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டனா். சிறிது நேரம் நடைபெற்ற இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவா் கொல்லப்பட்டாா். மற்ற பயங்கரவாதிகள் அருகில் இருந்த அடா் வனப்பகுதிக்குள் தப்பியோடினா்.
அதையடுத்து அந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்புப் படையினா் போலீஸாரும், சிஆா்பிஎஃப் வீரா்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். ஆளில்லா விமானம், ஹெலிகாப்டா்கள், மோப்ப நாய்கள் ஆகியவை கொண்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மோதலில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புல்வாமா பயங்கரவாதியின் உறவினா்: இதனிடையே, லாரியின் ஓட்டுநா் சமீா் தாா், அவரது உதவியாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சமீா் தாா், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடில் தாரின் உறவினா் ஆவாா். இத்தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.
கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும், காஷ்மீரில் பாதுகாப்புப் படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் அந்த தாக்குதல் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் தில்பக் சிங்.