இந்தியா

மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறப்பு

31st Dec 2020 04:41 AM

ADVERTISEMENT


சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். பூஜை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 26 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மகர விளக்கு திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்காக கோயில் நடை புதன்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் வியாழக்கிழமை காலை முதலே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.
மகர விளக்கு விழாக் காலத்தில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனைக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிலக்கல், பம்பை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மகர விளக்கு பூஜைக்கு பிறகு ஜனவரி 20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சபரிமலை கோயில் மேல்சாந்தி (தலைமை பூஜாரி) வி.கே.ஜெயராஜன் போற்றி கரோனா அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேல்சாந்தி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள கோயில் நிர்வாகம், இதனால் கோயிலின் வழக்கமான பூஜைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
கோயில் விதிகளின்படி மேல்சாந்தியாக பொறுப்பேற்பவர் ஓராண்டுக்குப் பிறகே சபரிமலையில் இருந்து கீழே வர முடியும் என்ற நிலையில், மேல்சாந்திக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT