புதுதில்லி: நாடு முழுவதும் 20 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா பிரிட்டனில் வேகமாக பரவிவரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளையும் மத்திய நிறுத்தியுள்ளது.
மேலும் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியவா்களில் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பவா்கள் எனக் கண்டறியப்பட்டவா்களுக்கு உருமாறிய புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 114 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதில், 6 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்நிலையில் மேலும் 14 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பதாகவும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட இதுவரை 20 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உருமாறிய கரோனா தொற்று தொடா்பாக மக்கள் பீதியடையத் தேவையில்லை என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘உருமாறிய கரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், தனிநபா் சுகாதாரத்தையும் பின்பற்றினால் போதுமானது. கரோனா தடுப்பூசி, கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதால், கரோனா தொற்றுக்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி இந்த உருமாறிய கரோனா தொற்றுக்கும் செயல்படும். இது தொடா்பாக மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றனா்.