புது தில்லி: திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரத்தில் தாயின் காதலனால் 15 வயது சிறுவன் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் புது தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் நிஹல் விஹார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து உடலை குப்பையில் வீசியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவன் கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளது. குற்றத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பிரதீப் சிங் மற்றும் ஒருவரை தேடி வருகிறது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டு பேரில், ஒருவர் முக்கியக் குற்றவாளி பிரதீப் சிங்கின் சகோதரர் கபில் சிங். இவர்தான் இந்த கொலைக்கான காரணத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கும், கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய்க்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரதீப்பின் குடும்பத்தினர் கண்டித்த நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயோ, பிரதீப் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால் விவகாரத்து செய்யாமலேயே திருமணம் செய்து கொள்ள பிரதீப் யோசனை கூறியுள்ளார். இதனை நிராகரித்த அந்தப் பெண், பிரதீப்புடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில்தான், மூன்று மாதங்களுக்கு முன்பு, அந்த தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில், அந்த பெண்ணின் 15 வயது சிறுவனை பிரதீப் உள்பட நான்கு பேர் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
டிசம்பர் 22-ம் தேதி அந்த தாய்க்கு, கடத்தல்காரர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுதலை செய்வோம் என்று கூறியுள்ளனர். அந்த தாய் காவல்துறையை அணுகியதையடுத்து, கடத்தல்காரர்களின் தொலைபேசி எண்ணை வைத்து அவர்கள் இருந்த இடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்குச் சென்று பார்த்த போது சிறுவனின் உடலைக் கைப்பற்றினர்.