மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்து வருவதால் சோவியத் யூனியனைப் போல் நாட்டில் உள்ள மாநிலங்கள் பிரிந்து செல்ல அதிக நேரம் எடுக்காது என சிவசேனை கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனை கட்சியின் பத்திரிக்கையான சாமனா மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகளைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சாமனாவில் வெளியான கட்டுரையானது, மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் அரசை பதவி நீக்கம் செய்வதில் யாராவது ஒருவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தால், அது பிரதமர் மோடியே என்ற பாஜக தலைவர் விஜயவர்கியாவின் அறிக்கையைப் குறிப்பிட்டு “மாநில அரசுகளின் உறுதியின்மைக்கு நமது பிரதமர் சிறப்பு அக்கறை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? நாடு ஒரு கூட்டமைப்பாக நிற்கிறது. பாஜக அரசுகள் இல்லாத மாநிலங்கள் கூட, தேசிய நலனைப் பற்றி பேசுகின்றன. ஆனால் தற்போது அந்த உணர்வுகள் கொலை செய்யப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை ஆட்சியில் இருந்து நீக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள சிவசேனை “ஒரு ஜனநாயகத்தில் அரசியல் தோல்விகள் மிகவும் பொதுவானவை. ஆனால் மம்தா பானர்ஜியை வெளியேற்ற மத்திய அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுவது வேதனையானது" என்று தெரிவித்துள்ளது.
“அரசியல் ஆதாயங்களுக்காக மக்களுக்கு தீங்கு விளைவிப்பதை மத்திய அரசு உணரவில்லை என்றால், சோவியத் யூனியனைப் போல நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் பிரிந்து செல்ல அதிக நேரம் எடுக்காது” எனவும் சிவசேனை எச்சரித்துள்ளது.