'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, கோவை சிறுமி காயத்ரி பற்றியும், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவர் பற்றியும் பேசியுள்ளார்.
'தமிழகத்தின் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். கரோனா நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார்.
புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேஷன் விடியோவாக மாற்றி மாணவர்களுக்கு பென்டிரைவில் கொடுத்துள்ளார். தொலைபேசி வாயிலாகவும் மாணவர்களை வழிநடத்தி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள்.
இதேபோல இம்மாதிரியான படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் 'திக்ஷா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அதேபோல கோவை சிறுமி காயத்ரி குறித்து, 'மனிதர்களுக்கான சக்கர நாற்காலிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் கோவையைச் சேர்ந்த ஒரு சிறுமி காயத்ரி, தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த உணர்வு உத்வேகம் அளிக்கிறது. மனதில் கருணையும் அன்பும் இருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும். அவருக்கு வாழ்த்துகள்' என்றார்.
மேலும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளிப்ரஸாத் நம் நாட்டு மக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் உள்ளூர் பொருள்களையே வாங்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் மக்கள் அனைவரும் இவ்வாறான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.