170 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா பாதிப்பு 2.78 இலட்சமாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நாளொன்றின் பாதிப்பு 19000-க்கும் கீழ் குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில்18,732 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி 18,653 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
170 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.78 இலட்சமாகக் குறைந்துள்ளது (2,78,690). நாட்டின் மொத்த பாதிப்பில் இது 2.74 சதவீதமாகும். கடந்த ஜூலை 10-ஆம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,76,682 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 21,430 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,61,538 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் குணமடைந்தோரின் வீதம் 95.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 95 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (94,82,848). குணமடைந்தவர்களில் 72.37 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 3,782 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,861 பேரும், சத்தீஸ்கரில் 1,764 பேரும் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்பில் 76.52 சதவீதம், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கேரளத்தில் அதிகபட்சமாக 3,527 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,854 பேரும், மேற்கு வங்கத்தில் 1,253 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 75.27 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 60 பேரும், மேற்கு வங்கத்தில் 33 பேரும், தில்லியில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.