இந்தியா

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

18th Dec 2020 05:03 PM

ADVERTISEMENT

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மேற்குவங்க மாநிலத்துக்குச் செல்கிறார்.  

மேற்குவங்க மாநிலத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென திரிணமூல் காங்கிரஸும் போட்டிகளத்தில் முயன்று வருகின்றன. 

இதனிடையே, கடந்த இரு தினங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளது மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

பந்தபேஷ்வர் தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா ஆகிய மூவரும் கட்சி, பதவியிலிருந்து விலகியுள்ளனர். 

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி மேற்குவங்கம் வந்த பாஜக தேசியத் தலைவர் நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மேற்குவங்க மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருநாள் பயணமாக மேற்குவங்கம் செல்லவிருக்கிறார். இன்று இரவு தில்லியிலிருந்து கொல்கத்தா செல்லும் அவர் அங்குள்ள நியூடவுன் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் இருநாள்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளார். 

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய எம்எல்ஏக்கள் நாளை அமித் ஷா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பாஜகவில் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT