இந்தியா

"தென்கிழக்கு ஆசியா'வின் நுழைவாயிலாக குவாஹாட்டியை மாற்றும் பணி தீவிரம்: அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால்

15th Dec 2020 06:46 AM

ADVERTISEMENT


கொல்கத்தா: குவாஹாட்டியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற தனது அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய தொழிலக வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

" பிபிஐஎன் (வங்கதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம்) நாடுகளைத் தவிர, ஆசிய சந்தையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாங்கள் குவாஹாட்டியை வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயிலாக மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்றி, அதன் மூலம் இப்பகுதியை வளர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆசிய நாடுகளின் சந்தை, அஸ்ஸாமின் லாபகரமான சந்தைக்கு அடிப்படையாக விளங்குகிறது. 

2018- ஆம் ஆண்டு அஸ்ஸாமில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்களின் உச்சிமாநாட்டின் மூலம், மாநிலத்திற்கு ரூ. 79,000 கோடி மதிப்புள்ள முதலீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளன. கரோனா பரவலுக்குப்பின் மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு துறைக்கு ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சலுகைகளை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

மாநில அரசு வேளாண் துறை வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்குவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. 

பிரிட்டன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு சரக்கு விமானங்கள் மூலம் காய்கறிகளை அரசு அனுப்பி வருகிறது. அஸ்ஸாமில் கரோனா பாதிப்பால் குறைவான இறப்பு விகிதங்களே பதிவாகியுள்ளன. இதனை பார்க்கும்போது, கரோனா பரவலை அரசு சிறப்பாகக் கையாண்டிருப்பது தெரிய வரும். சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT