இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு நான்காவதாக ஒரு விவசாயிகள் குழு ஆதரவு

14th Dec 2020 07:51 PM

ADVERTISEMENT


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நான்காவதாக ஒரு குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்திந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேசிசி) தலைமையிலான விவசாயிகள் குழு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4-வது குழு இது.

ஏஐகேசிசி பொதுச்செயலாளர் குனாவத் பாட்டில் ஹாங்கெர்கர் தலைமையிலான இந்தக் குழுவுக்கு 28 மாநிலங்களில் இருப்பு உள்ளது. தோமருடனான சந்திப்பின்போது, புதிய வேளாண் சட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு முன்பு ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் ஆதரவு தெரிவித்தன. 

ADVERTISEMENT

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பாட்டில் தெரிவித்தது:

"பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த சட்டங்களைப் பார்க்க முடிகிறது. தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சில சக்திகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது தெரியும். இதுபோன்ற சக்திகள், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்டங்களைப் பறிப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இருதரப்புக்கிடையே போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளை மீறினால், விரைவில் தீர்வு கிடைக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி எல்லைகளில் தொடர்ந்து 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

Tags : farm laws
ADVERTISEMENT
ADVERTISEMENT