தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு பாதகமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தில்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய அமைச்சர்கள் இன்று விவசாயிகளுடன் 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை சேர்ந்தவர்கள் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ''மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திருமப் பெற்று பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்
இந்தியாவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்'' என்று கூறினார்.