தில்லியில் நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக 36 இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 10 நாள்களாகப் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டின் வெளியுறவு செயலர் டொமினிக் ராபிக்கு விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கு கவலை அளிப்பதாக இருப்பதைக் குறிப்பிட்டு, இது குறித்து விவாதிக்க அவசரக்கூட்டத்தைக் கூட்ட கோரப்பட்டுள்ளது.
முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.