அமைதியான முறையில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களின் போராட்டங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் கடந்த 10 நாள்களாக தில்லியில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு ஐக்கிய நாடுகள் அவையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார்.
அமைதியாகப் போராட்டம் போராட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது எனத் தெரிவித்த டுஜாரிக் அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவளித்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடுவது தேவையற்றது என கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.