இந்தியா

தில்லி எல்லைகள் மூடல்: அண்டை மாநில திருமணங்கள் நடைபெறுவதில் சிக்கல்!

 நமது நிருபர்


புது தில்லி: திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனோ தில்லியில், மணப்பெண்ணோ பஞ்சாபில். தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தால், நிச்சயித்தபடி திருமணம் நடக்குமா என்ற அச்சத்தில் மணமக்கள் உள்ளனர். மாப்பிள்ளை அழைப்புக்கான ஏற்பாடுகள் தயார். பேண்ட் வாத்தியங்களும் தயார். ஆனால், மாப்பிள்ளைதான் வரவேண்டும் என்ற நிலையில், மணப்பெண் வீட்டார் தவிக்கின்றனர்.

தில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் வரும் 6}ஆம் தேதி திருமணம். ஆனால், தில்லியிலிருந்து எல்லையைக் கடப்பது எப்படி என்பது தெரியாமல் மணமகன் குடும்பத்தினர் விழிக்கின்றனர். அவர்கள் நீண்ட தூரம் போக வேண்டியது மட்டுமல்ல; பல தடைகளையும் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. 

மணமகனின் இருப்பிடம் மேற்கு தில்லியில் உள்ள ரஜெüரி கார்டன். மணப்பெண் இருப்பது பதிண்டாவில். அதாவது தில்லியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது அந்நகரம். ஆனால், விவசாயிகள் போராட்டத்தால் தில்லியிலிருந்து வெளியேறுவதற்கான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் எப்படி பயணிக்க முடியும்? வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற வேண்டிய நிலையில் பதிண்டாவுக்குச் செல்வது எப்படி என்று மணமகனும், அவருடைய நண்பர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் புதன்கிழமை 7}ஆவது நாளாக போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லிக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் அரசுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பதிண்டா செல்வதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் பயத்திலும் திகைப்பிலும் இருக்கின்றனர் மணமகன் வீட்டார்.

"தில்லியிலிருந்து பஞ்சாப் செல்வதற்கான சிங்கு, டிக்ரி மற்றும் காஜிப்பூர் வாயில்கள் மூடப்பட்டு விட்டன. புதன்கிழமை புறப்பட்டு பதிண்டா செல்லலாம் என்று முன்பு திட்டமிட்டிருந்தோம். ஆனால், விவசாயிகள் போராட்டம் தொடர்வதால், போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஏதாவது ஒருவகையில் காரில் கிராமம் கிராமங்களாகப் புகுந்து செல்ல முடியுமா என்று யோசித்து வருகிறோம்' என்கிறார் மணமகன் வீட்டார். ஒருவேளை நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு விட்டாலும் மாற்று வழியில் செல்லும் போது அங்கு சாலைகள் மூடப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது என்கிறார் மணமகனின் உறவினர் ஒருவர். விவசாயிகள் போராட்டம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை என்பதும் அவரது கருத்து. இவரின் நிலைதான் இப்படி என்று இல்லை. இதுபோல் இன்னும் பலரும் தவிக்கிறார்கள்.

மற்றொரு தவிப்பு: வடக்கு தில்லியில் புராரி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். அவருக்கு வரும் 9}ஆம் தேதி ஹரியாணா, குருúக்ஷத்ரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  அவருடைய வீட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஜிடி}கர்னால் சாலை வழியாகச் சென்றால், குருúக்ஷத்ரம் சென்றுவிடலாம். ஆனால், தற்போதைய சூழலில் அது அவ்வளவு எளிதல்ல. தில்லியிலிருந்து சுற்று வழியில் சென்றாவது குருúக்ஷத்ரத்தை அடைந்துவிட முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார் குமார். எப்படியும் தமது திருமண நாளான டிசம்பர் 9}ஆம் தேதிக்குள் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் முகேஷ் குமார் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT