இந்தியா

முகக்கவசம் அணியாதோருக்கு கோவிட் சேவை மையத்தில் பணி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

DIN

புது தில்லி: முகக்கவசம் அணியாதோருக்கு கோவிட் சேவை மையத்தில் தண்டனைப் பணி என்ற குஜராத் மாநில உயர் நீதிமன்ற உத்தரவிற்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமல் செய்தல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதுதொடர்பாக தலைமை நீதிபதி விக்ரம்நாத் மற்றும் நீதிபதி பர்திவாலா அடங்கிய அமர்வானது தாமாக முன்வந்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது. அப்போது எச்சரிக்கை மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கோவிட் மையத்தில் பணி அளித்து தண்டனை வழங்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதனன்று மாநில அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கமல் திரிவேதி, உயர் நீதிமன்ற உத்தரவினை அமல் செய்வது சிரமம் என்று கூறியதோடு, மேலும் ஒரு வாரம் அவகாசமும் கோரினார். ஆனால் அதனை மறுத்த அமர்வானது உடனடியாக இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிப்பதோடு கோவிட் சேவை மையத்தில், ஐந்து முதல் பதினான்கு நாட்கள் வரை பணி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது தினசரி குறைந்தபட்சம் 4 மணி முதல் 6 மணி நேரங்கள் வரை நடைபெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் மருத்துவம் தொடர்பு இல்லாமல் இடத்தை சுத்தப்படுத்துதல், பாத்திரங்களைத் தூய்மை செய்தல், சமையலில் உதவுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தகவல் சேகரிப்பு என்பதாக அமையலாம் என்றும் அந்த உத்தரவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வியாழனன்று சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தத மனுவானது அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் ஷா அடங்கிய அமர்விற்கு முன் விசாரணைக்கு வந்தது. குஜராத் மாநில அரசு சார்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது அவர் கோவிட் சேவை மையங்களில் தண்டனையாகப் பணி செய்வதன் மூலம் உண்டாகும் தொற்று அபாயத்தினை விட, முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதனால் உண்டாகும் தொற்று அபாயம் குறைவுதான் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்துவது சிரமம் என்றும் தெரிவித்தார்.

அவரது தொடர் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குஜராத் மாநில உயர் நீதிமன்ற உத்தரவிற்குத் தடை விதித்தனர். அதேசமயம் மாநில அரசானது பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்க வேண்டும்; சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு, விதிமுறைகளை மீறுவோருக்கு காவல்துறையினர் ரூ.1000 அபராதமாக விதிக்கலாம் என்றும் தெளிவுபடுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT