இந்தியா

கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ரக ஏவுகணை சோதனை வெற்றி

DIN

கடலில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
 இந்தியா - ரஷியா ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல், போர்க் கப்பல், போர் விமானம், நிலத்தில் இருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 கடலில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை அரபிக் கடல் பகுதியில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
 அதேபோல, வானில் இருந்து செலுத்தி வானில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை சுகோய் போர் விமானத்தின் மூலம் வங்காள விரிகுடாவில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடத்தப்பட்டது.
 தரையில் இருந்து சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சோதனை கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
 இந்நிலையில், கடலில் இருந்து புறப்பட்டு கடலில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையிலான இந்த சோதனையை இந்திய கடற்படையினர் வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக கடற்படையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ஒலியின் வேகத்தை விட சுமார் 3 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று அழிக்கவல்ல பிரமோஸ் ஏவுகணைகளின் வழக்கமான இலக்கு தூரம் 290 கி.மீ. ஆகும். ஆனால், தற்போது அதன் இலக்கு தூரம் 400 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 சீனாவின் எல்லையையொட்டியுள்ள லடாக், அருணாசல பிரதேச பகுதிகளில் ஏற்கெனவே ஏராளமான பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா குவித்து வைத்துள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் இந்தியா ஏராளமான ஏவுகணைகளை சோதித்துப் பார்த்துள்ளது. எதிரி நாட்டு ரேடார், தகவல் தொடர்புக் கருவிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையான ருத்ரம் 1ம் அதில் அடங்கும்.
 படை பலத்தை அதிகரிக்கும்விதமாக 40-க்கும் மேற்பட்ட சுகோய் ரக போர் விமானங்களில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளைப் பொருத்துவதற்கு இந்திய விமானப் படை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT