இந்தியா

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அபாரம்

தினமணி

மலேரியாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது; இந்தியாவில் கடந்த 2000-ஆவது ஆண்டில் 2 கோடியாக இருந்த மலேரியா பாதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் மலேரியா பாதிப்பு அதிகளவு குறைந்த நாடாக இந்தியா உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 "உலக மலேரியா அறிக்கை 2020'-ஐ உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: உலகளவில் 2019-ஆம் ஆண்டில் மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.9 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மாறாமல் தொடர்கிறது. 2018-ஆம் ஆண்டு மலேரியாவால் 4.11 லட்சம் பேர் பலியாகினர். 2019-இல் உயிரிழப்பு எண்ணிக்கை 4.09 லட்சமாக இருந்தது.
 உலகளாவிய மலேரியா பாதிப்பில் தென்கிழக்கு பிராந்தியத்தின் பங்கு 3 சதவீதமாகும். இந்நிலையில், மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இப்பிராந்தியத்தில் 2000-ஆவது ஆண்டில் 2.3 கோடியாக இருந்த மலேரியா பாதிப்பு 2019-இல் 63 லட்சமாக குறைந்துள்ளது. இது 73 சதவீதமாகும். 2000-இல் 35 ஆயிரமாக இருந்த மலேரியா உயிரிழப்பானது 2019-இல் 74 சதவீதம் குறைந்து 9 ஆயிரமாக உள்ளது.
 இந்த பிராந்தியத்தில் மலேரியா பாதிப்பைக் குறைத்ததில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. 2000-ஆவது ஆண்டில் இந்தியாவில் 2 கோடியாக இருந்த மலேரியா பாதிப்பு 2019-இல் 56 லட்சமாக குறைந்துள்ளது.
 2000-இல் 29,500-ஆக இருந்த உயிரிழப்பு, 2019-இல் 7,700-ஆக குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பாதிப்பை 18 சதவீதமும், உயிரிழப்பை 20 சதவீதமும் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மொத்த மலேரியா பாதிப்பில் 88 சதவீதமும், உயிரிழப்பில் 86 சதவீதமும் இந்தியாவின் பங்கு ஆகும்.
 உலகளாவிய மலேரியா பாதிப்பில் 70 சதவீதமும், உயிரிழப்பில் 71 சதவீதமும் பர்கினோ பாசோ, கேமரூன், காங்கோ குடியரசு, கானா, இந்தியா, மாலி, மொசாம்பிக், நைஜர், நைஜீரியா, உகாண்டா, தான்சானியா ஆகிய 11 நாடுகளிலேயே நிகழ்கின்றன.
 ஒட்டுமொத்த பாதிப்பில் 90 சதவீதம் ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே காணப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் 2000-ஆவது ஆண்டிலிருந்து மலேரியா உயிரிழப்பு 44 சதவீதம் குறைந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நோய்த் தடுப்பு நடவடிக்கை மெதுவாகவே உள்ளது.
 உயிர் காக்கும் கருவிகளை பெறுவதில் உள்ள இடைவெளியானது இந்நோய்க்கு எதிரான சர்வதேச முயற்சிக்கு தடைபோடுகிறது. மேலும், கரோனா நோய்த் தொற்று இந்தப் போராட்டத்துக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் முடுக்கிவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT