இந்தியா

அரசு - விவசாயிகள் பேச்சில் இழுபறி

தினமணி

நாளை மீண்டும் பேச்சு; போராட்டம் தொடர்கிறது
தில்லி எல்லையில் கடந்த ஆறு நாள்களாக தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நடத்திய மூன்று மணி நேர பேச்சில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வியாழக்கிழமைக்கு (டிச.3) ஒத்திவைக்கப்பட்டது.
 "புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க நிபுணர் குழுவை நியமிக்கலாம்' என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை விவசாயிகள் நிராகரித்ததால் விவசாயிகள் பிரச்னையில் இழுபறி நீடிக்கிறது.
 மேலும், "திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த முடிவையும் ஏற்கமாட்டோம். போராட்டம் தொடரும்' என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
 விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் புது தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் உள்ளிட்டோரும், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 35 சங்கங்களில் 32 சங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவை. ஹரியாணா மாநிலத்தின் சார்பாக இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகளும், அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக யோகேந்திர யாதவும் கலந்து கொண்டனர்.
 சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர்கள் விரிவாக எடுத்துரைத்தாகவும், விரிவாக விவாதம் நடத்தப்பட்டதாகவும் மத்திய அரசு பின்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஐந்து நபர் நிபுணர் குழுவை உருவாக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
 இன்று விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்: இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பிட்டு விவசாயிகள் புதன்கிழமை (டிச.2) மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மீது வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தோமர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் சிறு குழுக்கள் அமைக்கலாம் என்று நாங்கள் தெரிவித்த யோசனையை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்' என்றார்.
 இந்தப் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு "நேரம்தான் முடிவு செய்யும்' என்றார்.
 முன்னதாக, 35 விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பாரதிய விவசாய யூனியனின் தலைவர் ராகேஷுடன் மத்திய அமைச்சர் தோமர் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தோமர், "அவர்தான் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். அனைவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்' என்றார்.
 இதனிடையே, "புதிய சட்டங்கள் ரத்துச் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்து எங்களுக்கு பரிசு தரப் போகிறதா அல்லது துப்பாக்கிச்சூடு நடத்தி வெடிகுண்டை பரிசாகத் தரப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்' என்று விவசாயிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான சந்தா சிங் தெரிவித்தார்.
 ஆலோசனை: முன்னதாக, விவசாயிகளுடன் டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என கடந்த மாதம் விவசாயிகளுடன் நடத்திய கூட்டத்தில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், போராட்டம் வலுத்ததால், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திர தோமர், ராஜ்நாத் சிங் ஆகியோர் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீட்டில் செவ்வாய்க்கிழமை கூடி கலந்து ஆலோசித்து பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த முடிவு செய்தனர்.
 6-ஆவது நாளாக போராட்டம்: இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நீடித்தது. இதையடுத்து, தில்லியையொட்டியுள்ள டிக்ரி, சிங்கு எல்லைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வலுக்கட்டாயமாக தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுப்புகளைக் கொண்டு தடுத்து நிறுத்தினர். உ.பி. எல்லைப் பகுதியான காஜிப்பூரில் விவசாயிகள் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை போலீஸார் கடுமையாகப் போராடி தடுத்து நிறுத்தினர்.
 தில்லி - காஜிப்பூர் எல்லைப் பகுதியில் உ.பி. மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் மற்றும் அவரது தொண்டர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
 இந்த நிலையில், "போராட்டத்தில் பங்கேற்பவர்களில் பலர் விவசாயிகளாகத் தெரியவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், போராட்டக்காரர்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளும், இடைத்தரகர்களுமே இருப்பதாகத் தெரிகிறது' என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
 திருப்பி அனுப்பினர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லியில் ஷாகீன்பாக் பகுதியில் நீண்ட நாள் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று அமெரிக்க "டைம்' பத்திரிகையில் பிரபலமானவர்கள் நூறுபேரின் பட்டியலில் இடம் பெற்ற மூதாட்டி பில்கிஸ் பானு, தில்லி-ஹரியாணா எல்லைப்பகுதியான சிங்குவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த இடத்திற்கு வந்தார். ஆனால், அவரை போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT