இந்தியா

பிராந்தியத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம்: வெங்கய்ய நாயுடு

1st Dec 2020 07:06 AM

ADVERTISEMENT


புது தில்லி: "நமது பிராந்தியம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதமாகும்; இந்த அச்சுறுத்தலை நீக்கும் சக்தி உண்மையான பொருளாதார வளர்ச்சியில்தான் உள்ளது' என இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தெரிவித்தார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சார்பில் காணொலி முறையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வெங்கய்ய நாயுடு மேலும் கூறியதாவது: ஆசிய பிராந்தியத்தின் முக்கியமான சவாலாக பயங்கரவாதம் உள்ளது. குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதம் அமைந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து போராட ஒரு கூட்டு நடவடிக்கைக்கான அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும்.  

பயங்கரவாதத்தை பாதுகாப்புக் கொள்கையின் கருவியாகக் கருதும் நாடுகள் குறித்து நாங்கள் பெரிதும்  கவலை கொண்டுள்ளோம். இந்த பிராந்தியம் எதிர்கொண்டுள்ள முக்கிய  சவால் எல்லை தாண்டிய பயங்கரவாதமாகும். பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்றுவதன் மூலமாகவே இந்த பிராந்தியத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். 

எஸ்சிஓ அமைப்பில் இருதரப்புப் பிரச்னைகளை வேண்டுமென்றே எழுப்புவதற்கான முயற்சிகளை அண்டை நாடு (பாகிஸ்தான்) மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது குழுவின் சாசனத்தின் கொள்கைகளையும், விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறும் செயல் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

கடந்த 2017- ஆம் ஆண்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பினராக இணைந்த பின் இந்தியா இந்த அமைப்பின் கூட்டத்தை முதன்முறையாக நடத்துகிறது.  

முன்னதாக, செப்டம்பர் மாதம் நடைபெற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தானின் பிரதிநிதி காஷ்மீரை தவறாக சித்திரிக்கும் வரைபடத்தை முன்வைத்ததை கண்டித்து அக்கூட்டத்திலிருந்து வெளியேறினார். அப்போது, இந்த கூட்டத்தின் விதிமுறைகளை பாகிஸ்தான் அப்பட்டமாக மீறியதாக கூறி இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT