இந்தியா

விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

1st Dec 2020 06:10 AM

ADVERTISEMENT


வாராணசி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், பிரதமர் மோடி தன் மக்களவைத் தொகுதியான வாராணசியில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு கட்டுமானத் திட்டங்களைப் பார்வையிட்ட பிறகு அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வேளாண் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. விவசாயிகளை சிலர் (எதிர்க்கட்சிகள்) பல தசாப்தங்களாக ஏமாற்றி வந்தனர். தற்போது புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அவர்கள் மீண்டும் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு அது தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்படுவது இயல்பானதே. ஆனால், தற்போது சட்டங்கள் தொடர்பான தவறான செய்திகளை மக்களிடையே பரப்புவதன் மூலமாக சந்தேக மனநிலையை ஏற்படுத்தி, அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய போக்கு நாட்டில் அதிகரித்து வருகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்: மண்டிகளுக்கு வெளியேயும் வேளாண் பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தருகின்றன. அதே வேளையில், வழக்கமான முறைப்படி மண்டிகளிலேயே விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்யலாம். அதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. 

அதேபோல், வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். மண்டிகளை மேம்படுத்துவதற்காக கோடிக் கணக்கில் மத்திய அரசு செலவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தைக் கைவிடுவதென்றால், மண்டிகளை அதிக செலவில் மேம்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

முந்தைய ஆட்சிக் காலங்களில் வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும். ஆனால், விவசாயிகளிடமிருந்து மிகக் குறைவான அளவிலேயே விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 
வந்தன. 

விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்பு: குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் கடன்கள் தள்ளுபடி, உர மானியம் உள்ளிட்ட அனைத்திலும் முந்தைய ஆட்சிக் காலங்களில் விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டனர். பாஜக அரசின் கீழ் உரங்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது; வேளாண் விளைபொருள்களின் உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்களானது, மண்டி அமைப்புகளுக்கு வெளியே வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்பை அளிக்கிறது. அதன் மூலமாக வர்த்தகர்களால் விவசாயிகள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.

வாராணசிக்கும் அலாகாபாதுக்கும் இடையே 73 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 6 வழி நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு திங்கள்கிழமை அர்ப்பணித்தார். அந்த நெடுஞ்சாலையானது ரூ.2,447 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வாராணசி தொழில் வழித்தட திட்டத்தை ஆய்வு செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் அவர் வழிபட்டார். அக்கோயில் வளாகத்தையொட்டி ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார்.


இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்களை செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் டிச.3- ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பனிக்காலம், கரோனா தொற்று பரவி வரும் சூழலில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எனவே, பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் டிச.1- ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT