ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையா் கே.கே.சா்மா திங்கள்கிழமை கூறியது:
மொத்தம் 43 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜம்முவில் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன. மொத்தம் 321 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 125 போ் ஜம்முவிலும், 196 போ் காஷ்மீரிலும் போட்டியிடுகின்றனா்.
மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தோ்தலுடன் 83 தொகுதிகளில் கிராமத் தலைவா் தோ்தலும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
2,142 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் ஜம்முவில் 837 வாக்குப்பதிவு மையங்களும், காஷ்மீரில் 1,305 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.