இந்தியா

இன்று ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

DIN



ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சிக்கான  வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை  (டிச. 1)  நடைபெற உள்ள நிலையில், அங்கு சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையாக தேர்தல் பிரசாரம் நடைபெற்று ஓய்ந்துள்ளது.  

150 வார்டுகளை உள்ளடக்கிய ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 

இத்தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,222. இந்த தேர்தலுக்காக தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் 48,000 ஊழியர்களையும், 52,000 போலீஸாரையும் நியமித்து விரிவான தேர்தல் ஏற்பாடுகளை செய்துள்ளது. 

கரோனா தொற்று தடுப்பைக் கருத்தில் கொண்டு, இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமுகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஏற்ப அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சி.பாரதசாரதி தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத் மேயரை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஸ்மிருதி இரானி, உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் பிரசாரத்தில் பங்கேற்றனர். 

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்), அகில இந்திய மஜ்லீஸ் கட்சியான ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியை எதிர்த்து, பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதேசமயம், டிஆர்எஸ் கட்சி மாநில அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தியது.  காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் அதன் மாநிலத் தலைவர் எம்.உத்தம்குமார் ரெட்டி, செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் மூத்த தலைவர்கள் பலர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். 

தெலுங்கு தேசம் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில், தங்களது ஆட்சியின்போது ஹைதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றது என்பதை மேற்கோள் காட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது பிரசாரத்தில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் ஹுசைன்சாகர் ஏரிக்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் சமாதிகளை அழிக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT