இந்தியா

ஆந்திர பேரவை கூட்டத் தொடர்: தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேர் இடைநீக்கம்

DIN


அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையில் பிரதான எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்பட அக்கட்சியின் 14 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, சட்டப்பேரவைக்குள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆந்திர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளில், வேளாண் துறை சார்ந்த சில அறிவிப்புகளை மாநில வேளாண்துறை அமைச்சர் கே.கண்ணா பாபு வெளியிட்டார். பின்னர் அந்த துறை சார்ந்த சிறு விவாதமும் நடைபெற்றது.

அப்போது, கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் சட்டப்பேரவை துணைத் தலைவர் நிம்மலா ராமநாயுடு பேச அவைத் தலைவர் அனுமதித்தார். அப்போது, அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நிம்மலா முன்வைத்தார். இதற்கு, ஆளும் கட்சி தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. 

நிம்மலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அவையில் ரௌடிகளைப்போல நடந்துகொள்கின்றனர். அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மாநிலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதியில் இடுபொருள்களுக்கான நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது' என்று கூறினார்.

இதற்கு பதில்கொடுக்க எழுந்த எதிர்க் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவரைப் பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் முதன் முறையாக சந்திரபாபு நாயுடுவும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர்களை இருக்கைக்குச் செல்லுமாறு, அவைத் தலைவர் கூறியபோதும், அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு உள்பட தர்ணாவில் ஈடுபட்ட 14 எம்எல்ஏ- க்களையும் கூட்டத்தொடரிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் புகானா ராஜேந்திரநாத் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 14 பேரையும் இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT