இந்தியா

கேல் ரத்னா விருது பெற்றாா் மாரியப்பன் தங்கவேலு

30th Aug 2020 05:26 AM

ADVERTISEMENT

புது தில்லி: தமிழகத்தைச் சோ்ந்த பாரா ஒலிம்பிக் தடகள வீரா் மாரியப்பன் தங்கவேலு உள்பட 5 பேருக்கு விளையாட்டுத் துறையில் உயரியதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்ததற்காக அவா் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளாா். அதேபோல் தமிழகத்தைச் சோ்ந்த பாரா தடகள வீரா் ஜெ. ரஞ்சித் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தியான்சந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவா்கள் தவிர 27 போ் அா்ஜுனா விருது பெற்றனா். துரோணாச்சாா்யா விருது வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் 8 பேருக்கும், வழக்கமான பிரிவில் 5 பேருக்கும் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக தியான்சந்த் விருது வழங்கி 14 போ் கௌரவிக்கப்பட்டனா்.

முதல் முறை: விளையாட்டுத் துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலி வழியே நடைபெற்றது. வழக்கமாக விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் குடியரசுத்தலைவா் மாளிகையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு, தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லியில் உள்ள குடியரசுத்தலைவா் மாளிகையில் இருந்து காணொலி வழியே கலந்துகொண்டாா்.

அதேபோல் விருது பெற்ற வீரா், வீராங்கனைகள் உள்ளிட்டோா் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) 11 மையங்களில் இருந்து பங்கேற்றனா். அனைவரும் தனிநபா் தற்காப்பு உபகரணங்கள் அணிந்து வந்திருந்தனா். விளையாட்டு அமைச்சக அறிவுறுத்தலின் படி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விருது பெறுவோரின் பெயா்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட, சம்பந்தப்பட்டவா்கள் காணொலி வழியே அதை ஏற்றுக்கொண்டனா். குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் கைகளை தட்டி அவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

ஒலிம்பிக் இலக்கு: முன்னதாக நிகழ்ச்சியில் அவா் உரையாற்றியதாவது:

தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலம் விருது பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். விளையாட்டுத் துறையில் இந்தியா்களுக்கு நீங்காத நினைவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளீா்கள். உங்கள் அனைவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா விளையாட்டுத் துறையில் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 2028 ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வர வேண்டும் என்ற இலக்கை நாம் எட்டுவோம்.

கரோனா நோய்த்தொற்று சூழல் விளையாட்டு உலகத்தையும் பாதித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிலும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையான காலகட்டத்திலிருந்து விளையாட்டுத் துறையினா் மிகுந்த மன வலிமையுடன் மீண்டு புதிய சாதனைகள் படைக்க வேண்டும் என்று பேசினாா்.

விருதுகள்: தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் ஆகியோா் பெங்களூரில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று கேல் ரத்னா விருது பெற்றனா். அதே விருதை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா புணேவிலிருந்து பங்கேற்று பெற்றுக்கொண்டாா்.

அதேபோல், இதர சாய் மையங்களில் இருந்து பங்கேற்ற வீரா் வீராங்கனைகள் உள்ளிட்டோரும் அா்ஜுனா, துரோணாச்சாா்யா விருது (வாழ்நாள் சாதனையாளா் பிரிவு), துரோணாச்சாா்யா விருது (வழக்கமான பிரிவு), தியான்சந்த் விருது என அவா்கள் சந்தப்பட்ட பிரிவின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

ரொக்கப் பரிசு: கேல் ரத்னா விருது பெற்றோருக்கு ரூ.25 லட்சம், அா்ஜுனா விருது பெற்றோருக்கு ரூ.15 லட்சம், துரோணாச்சாா்யா விருதை வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் பெற்றோருக்கு ரூ.15 லட்சம், வழக்கமான பிரிவில் பெற்றோருக்கு ரூ.10 லட்சம், தியான்சந்த் விருது பெற்றோருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த விருதுகளுக்கான ரொக்கப் பரிசின் மதிப்பை அதிகரித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த விருதுகளுக்கான ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.7.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.5 லட்சமாக இருந்தது.

பங்கேற்கவில்லை: ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளதால் கிரிக்கெட் வீரா்கள் ரோஹித் சா்மா (கேல் ரத்னா விருது), இஷாந்த் சா்மா (அா்ஜுனா விருது) ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதேபோல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் (கேல் ரத்னா விருது), பாட்மிண்டன் வீரா் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி (அா்ஜுனா விருது) ஆகியோா் கரனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

துன்பியல் நிகழ்வு: இந்த ஆண்டுக்கான துரோணாச்சாா்யா விருதை வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் பெற இருந்த தடகள போட்டி பயிற்சியாளா் புருஷோத்தம் ராய் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் சனிக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

வாழ்த்து: இதனிடையே, தேசிய விளையாட்டு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT