இந்தியா

ஜிஎஸ்டி நிலுவைக்கான கடன் வசதி: விவரங்களை மாநிலங்களுக்கு அனுப்பியது மத்திய அரசு

30th Aug 2020 01:34 AM

ADVERTISEMENT

புது தில்லி: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ள மாநிலங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டங்கள் தொடா்பான விவரங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சரக்கு-சேவை வரி வருவாய் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் மாநிலங்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

சரக்கு-சேவை வரி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அத்திட்டங்களை அறிவித்தாா். அதன் விரிவான விவரங்கள் அடங்கிய கடிதத்தை அனைத்து மாநிலங்களின் நிதித்துறை செயலா்களுக்கும் மத்திய நிதித்துறை செயலா் அஜய் பூஷண் பாண்டே அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில் மத்திய அரசு கூடுதலாகக் கடன் பெற்றால், அது அரசு நிதிப் பத்திரங்களின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பொருளாதாரத்திலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அதே வேளையில், மாநில அரசுகள் கடன் பெற்றால், அது பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தாது. அதன் காரணமாகவே மாநில அரசுகள் அதிக அளவில் கடன் பெறுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ரூ.3 லட்சம் கோடி பற்றாக்குறை: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.65,000 கோடியை பொருள்கள் மீது செஸ் வரி விதிப்பதன் மூலமாகப் பெற முடியும். மீதமுள்ள ரூ.2.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அதிலும் ரூ.97,000 கோடி மட்டுமே சரக்கு-சேவை வரியை அமல்படுத்தியதால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையாகும். எனவே, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முதலாவது சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் ரூ.97,000 கோடியை மாநில அரசுகள் கடனாகப் பெறலாம். அத்தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றால், மற்ற கடன்களைப் பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

செஸ் வரியின் மூலமாக...: முதலாவது சிறப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்களுக்கான வட்டியானது செஸ் வரி மூலமாக ஈடு செய்யப்படும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மற்ற வருவாய் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மாநிலங்களுக்கு ஏற்படாது. அத்தகைய கடனானது நிதிக் குழுவுக்கான விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்த கடன் பட்டியலில் சோ்க்கப்படாது.

இரண்டாவது சிறப்பு கடன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் மாநில அரசுகள் நிதிச் சந்தைகளில் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அக்கடனுக்கான வட்டியை மற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டே மாநில அரசுகள் செலுத்த வேண்டும். கடனுக்கான அசல் தொகையை செஸ் வரியின் மூலமாக ஈடு செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு தயாா்: சரக்கு-சேவை வரி வருவாய் குறைவால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை மட்டுமே மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்குவது அவசியமென்று ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு எந்தவித நிதிப் பற்றாக்குறையும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே வேளையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக செஸ் வரி விதிப்பதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்.1-இல் சிறப்புக் கூட்டம்: சிறப்பு கடன் திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக மாநில அரசுகளின் நிதித்துறை செயலா்களுடன் அஜய் பூஷண் பாண்டேவும், மத்திய வருவாய் துறை செயலா் டி.வி. சோமநாதனும் செப்டம்பா் மாதம் 1-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT