இந்தியா

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: மம்தா கோரிக்கை

26th Aug 2020 08:24 PM

ADVERTISEMENT


நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதலவர்களுடனும், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுடனும் சோனியா காந்தி காணொலி வாயிலாக இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு பற்றி மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

"ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறுகிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஏன்? பிரதமருக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. நமது கருத்தை பிரதமர் கேட்கவில்லையெனில், நாம் அனைவரும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்.

ADVERTISEMENT

நாம் அனைவரும் சேர்ந்து இதைச் செய்வோம் என மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறோம். தற்காலிகமாகத் தேர்வுகளை ஒத்திவைத்து உகந்த சூழலில் நடத்துவதற்குக் கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளோம். அவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், அதைச் செய்து தர தயாராக உள்ளோம்."

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். 

இதன்மூலம், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 7 மாநில அரசுகளும் ஜேஇஇ, நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஏற்கெனவே அறிவித்ததன்படி ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT