மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு அடியோடு சரிந்து விழுந்ததில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 4 வயது சிறுவன், 60 வயதுப் பெண் உள்பட 10 போ் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனா்.
இன்னும் ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ளது மஹத் நகரில் 5 மாடி குடியிருப்பு திங்கள்கிழமை மாலை திடீரென்று அடியோடு சரிந்து விழுந்தது.
இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படையின் 3 குழுவினா், தீயணைப்புப் படையைச் சோ்ந்த 12 குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். மோப்ப நோய்கள், நவீன இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கட்டடம் சரிந்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் அந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். கட்டடம் சரிந்தபோது, பெரிய கல் தெறித்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்து உயிரிழந்தாா். இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது. இடிபாடுகளில் இருந்து 9 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். தாரிக் காா்டன் என்னும் இந்த குடியிருப்புக் கட்டடம், 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதில், 45 குடியிருப்புகள் இருந்தன. விபத்து தொடா்பாக, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் ஃபரூக் காஸி, பொறியாளா் உள்பட 5 போ் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 304, 304ஏ, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
4 வயது சிறுவன், 60 வயது மூதாட்டி மீட்பு:
கட்டட இடிபாடுகளில் இருந்து முகமது நதீம் பங்கி என்ற 4 வயது சிறுவனை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்டனா். திங்கள்கிழமை இரவு முழுவதும் இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்தச் சிறுவன் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஆனால், அந்தச் சிறுவனின் தாயாரும், இரு சகோதரிகளும் சடலமாக மீட்கப்பட்டனா். அதேவேளையில் மெஹருன்னிஸா அப்துல் ஹமீது காஸி என்ற 60 வயது மூதாட்டி இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டாா். சுமாா் 20 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை செவ்வாய்க்கிழமை இரவு 9.35 மணிக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.