மத்திய அரசு அறிவித்துள்ள ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பிரபல திரைக்கலைஞர் சோனு சூட் கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் மத்தியில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகளான ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரோனா பரவலின் மத்தியில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் நலனை பாதிக்கும் எனக்கோரி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல திரைக்கலைஞர் சோனு சூட் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப்பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர்,“தேர்வுக்கு வரும் மாணவர்கள் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வருகிறார்கள். தேர்வு அவசியம். ஆனால் இளம் மாணவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது. ஏன் தேர்வை ஒத்திவைக்கக் கூடாது." எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் "கரோனா தடுப்பூசி 2021ல் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருந்தாலும் நுழைவுத் தேர்வுகள் கவலையை ஏற்படுத்துகின்றன." என்றும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திட்டமிட்டபடி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.