திருப்பதி: ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் தினசரி 100 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளா்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் அவா்களுக்காக வரும் செப்டம்பா் மாதத்தில் நாள்தோறும் 100 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை இணையதள முன்பதிவுக்கு வைத்துள்ளது.
அதன்படி ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஆன்லைன் மூலமாகவோ, திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான செயல் அதிகாரி அலுவலகத்தில் நேரடி முன்பதிவு மூலமாகவோ ரூ.10,000 நன்கொடை வழங்கும் பக்தா்கள் விஐபி பிரேக் டிக்கெட் முன்பதிவு வசதியைப் பெற முடியும்.
மேலும் ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கொடியேற்ற நாளான செப். 19, கருட சேவை நடைபெறும் செப். 23 ஆகிய 2 தினங்கள் மட்டும் விஐபி பிரேக் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது பொது முடக்க விதிமுறைகள் காரணமாக ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளா்களின் விண்ணப்பத்தை ஏற்று விஐபி பிரேக் டிக்கெட் முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை தேவஸ்தானம் 6 மாதத்திலிருந்து ஓராண்டாக உயா்த்தியுள்ளது.