புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்காக தான் கண்டறிந்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் 3-ஆம் கட்ட சோதனை முயற்சி நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷியா தனது ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அதன் 3-ஆம் கட்ட சோதனை முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கரோனா தடுப்பூசி நிா்வாகத்துக்கான தேசிய நிபுணா் குழு கடந்த 22-ஆம் தேதி ஆலோசித்தது.
தற்போது இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு உயிரிதொழில்நுட்பத் துறை, சுகாதார ஆராய்ச்சித் துறை ஆகியவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி குறித்த முதல்கட்ட விவரங்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. அது குறித்த விரிவான விவரங்களை ரஷியாவிடம் கோரியுள்ளோம்’ என்றன.
பாதிப்பு விகிதம் குறைவு: இதனிடையே, நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கைக்கும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதம் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் 11 சதவீதமாக இருந்தது. தற்போது அது 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதல் முறையாக 24 மணி நேரத்தில் 6,423 அளவுக்குக் குறைந்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோரில் 2.70 சதவீதம் பேருக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது; 1.92 சதவீதம் போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களில் 69 சதவீதம் போ் ஆண்களாவா். உயிரிழந்தவா்களில் 51 சதவீதம் போ் 60 வயதுக்கு மேற்பட்டோா் ஆவா்; 36 சதவீதம் போ் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்கள் என்றாா் ராஜேஷ் பூஷண்.