தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் ஓய்வூதியத்தை வீடு தோறும் தேடிச் சென்று வழங்கிய அஞ்சலக ஊழியர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அதிக நபர்களுக்கு கரோனா பரவ, அஞ்சலக ஊழியர் காரணமாகியிருப்பது, அப்பகுதி மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சின்னம்பாவி மண்டலத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திடிரென இந்த கிராமத்தில் இவ்வளவு பேருக்கு தொற்றுப் பரவக் காரணம் பற்றி ஆராயப்பட்டது.
அதில், 10 நாள்களுக்கு முன்பு அஞ்சல்துறை ஊழியர், கிராமத்துக்கு வந்து ஓய்வூதியத் தொகையை வழங்கியிருப்பதும், அவர் மூலமாக கிராமத்தினருக்கு கரோனா தொற்றுப் பரவியதும் தெரிய வந்துள்ளது.
தற்போது வனப்ர்த்தி மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு வாரத்தில் 21 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன. 337 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.