கேரளத்தில் இதுவரை இல்லாதவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,476 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2,476 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதில் 22,344 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,351 பேர் இன்று (புதன்கிழமை) குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 41,694-ஆக அதிகரித்துள்ளது. 1,89,781 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களில் 64 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 99 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
10 இடங்கள் கரோனா அதிகம் பரவும் இடமாக கணிக்கப்பட்டுள்ளது. 25 இடங்கள் தொற்று அதிகம் பரவும் இடங்களின் பட்டியலில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் இதுவரை 604 இடங்கள் தொற்று அதிகம் பரவும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.