பஞ்சாபில் கடந்த 2 நாள்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
23 பேரில் மூன்று பேர் அமைச்சர்கள். இரண்டு அமைச்சர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியுடனான ஆலோசனையின்போது முதல்வர் அம்ரீந்தர் சிங் இதனைத் தெரிவித்தார்.
நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. இழப்பீடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் மாநில உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
இதில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசியதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிலை என்றால், மற்ற சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பார்க்க வேண்டும்.
23 பேரில், 13 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஆறு பேர் ஷிரோமணி அகாலிதளம் மற்றும் மூன்று பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஆளும் கட்சியில் குர்பிரீத் சிங் கங்கர், சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா, சுந்தர் ஷாம் அரோரா ஆகிய மூன்று அமைச்சர்களுக்கும், ஹர்தயால் கம்போஜ், பர்கத் சிங், மதன் லால் ஜலல்பூர் மற்றும் அஜய்ப் சிங் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.