இந்தியா

பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

26th Aug 2020 11:27 AM

ADVERTISEMENT


புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 

நீதித்துறையை விமர்சித்து பிரசாந்த் பூஷண் வெளியிட்ட 2 சுட்டுரை பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. 

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி கடந்த 24-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. 

எனினும், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோர மறுத்ததையடுத்து அந்த விவகாரம் தொடர்பான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ADVERTISEMENT

விசாரணை தொடங்கியதும் பிரசாந்த் பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமர்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று தெரிவித்தார். 

இதையடுத்து, நீதிமன்றம் பிரசாந்த் பூஷணை கண்டித்து அவரை மன்னிக்க வேண்டும் என்றும், அதேவேளையில் பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறினார். 

எனினும், தன்னை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பை திரும்பப் பெற்று உச்சநீதிமன்றம் பெருந்தன்மைப் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் முறையிட்டார். அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவண், "பிரசாந்த் பூஷணை கண்டிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளது அதீதமான ஒன்றாகும். பிரசாந்த் பூஷண் கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடவில்லை. அவரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பை திரும்பப் பெற்று, அவருக்கு தண்டனை விதிக்கப்படக் கூடாது. இதை பிரசாந்த் பூஷண் சார்பாக தெரிவிக்கிறேன்' என்று ராஜீவ் தவண் கூறினார். 

இதையடுத்து, "ஒரு நபர் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்' என்று தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. அடுத்த விசாரணையின்போது பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 

வேறு அமர்வுக்கு மாற்றம்: இதனிடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நீதித்துறைக்கு எதிராக லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றுவதென உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது. மேலும் அந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்த வழக்கையும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT