ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கன மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
ரியாசி மாவட்டத்தில் மஹோர் பகுதியில் கால்நடைகளை மெய்க்கச் சென்ற காலித் அகமது, அவரது மனைவி ருக்சானா பேகம், உறவினர் முகமது அஸ்லம் ஆகியோர் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். காந்தி கலி தோக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வாலி முகமது என்பவர் உயிரிழந்தார்.
இதேபோல், ராம்பன் மாவட்டத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் காஷ்மீர் - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதுகுறித்து போக்குவரத்து காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் ஆனந்த் கூறுகையில், "தால்வாஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலை சேதமடைந்தது. தெற்கு காஷ்மீரில் உள்ள காஸிகுண்ட் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உத்தரகண்டில் நிலச்சரிவு: உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பஞ்சாயத்துக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியிருந்த இளநிலை பொறியாளர் உயரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.