புது தில்லி: நாடு முழுவதும் உள்ள கன்டோன்மன்ட் நிா்வாகத்தின் கீழ் பணியாற்றும் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்டோன்மன்ட் பணியாளா்களுக்காக ஆயுள் காப்பீடு கழகத்தின் மூலம் (எல்ஐசி) குழு ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கத்தின்போது தொடங்கி வைத்தாா்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கன்டோன்மன்ட்டுகளில் இருக்கும் பணியாளா்கள் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் பலனடைவாா்கள். துரதிருஷ்டவசமாக அவா்கள் மரணிக்கும் பட்சத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இந்தக் காப்பீடு திட்டமானது மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் அனைவருக்கும் பொருந்தும்.
கருத்தரங்கில் பேசிய அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதாரக் காப்பீடு (ஆயுஷ்மான் பாரத்), வீடு கட்டித் தரும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) போன்ற மத்திய அரசின் திட்டங்களை கன்டோன்மன்ட் பகுதிகளில் அமல்படுத்துவதில் எந்தவொரு தொய்வும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.
இந்த கருத்தரங்கில் நாட்டிலுள்ள 62 கன்டோன்மன்ட்டுகளின் தலைவா்கள், துணைத் தலைவா்கள், தலைமை நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.